×

களக்காடு அருகே அனுமதியின்றி நுங்கு வெட்டியதை கண்டித்த காண்ட்ராக்டர் மீது தாக்குதல்

களக்காடு, ஏப்.28: களக்காடு அருகே அனுமதி இன்றி நுங்கு வெட்டியதை கண்டித்த காண்ட்ராக்டரை தாக்கிய வாலிபர் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். களக்காடு அருகே மாவடி, நெரிஞ்சிவிளையை சேர்ந்தவர் பவுல் மகன் பன்னீர்செல்வம் (40). இவர் கட்டுமான தொழில் காண்ட்ராக்டராக உள்ளார். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மலையடிபுதூரை சேர்ந்த செல்லத்துரை மகன் சாமுவேல் (20), தாமரைகுளம் அருகே உள்ள ஜெயராமன் என்பவரது தோட்டத்தில் அனுமதியின்றி பனை மரத்தில் ஏறி நுங்குகளை வெட்டியுள்ளார். இதனை பார்த்த பன்னீர்செல்வம், சாமுவேலை கண்டித்துள்ளார்.

இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று சாமுவேல், பன்னீர்செல்வத்திற்கு போன் செய்து, கட்டுமான பணி உள்ளது என்றும், அதுபற்றி பேச ராஜபுதூர் ஊருக்கு தென்புறமுள்ள பாலத்திற்கு வரும் படி அழைத்துள்ளார். இதையடுத்து பன்னீர்செல்வம் அங்கு சென்றார். அப்போது அங்கிருந்த சாமுவேல் உள்பட 5 பேர் சேர்ந்து, பன்னீர்செல்வத்தை அவதூறாக பேசி, சரமாரியாக தாக்கினர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனால் காயமடைந்த பன்னீர்செல்வம் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து பன்னீர்செல்வத்தை தாக்கிய சாமுவேல் உள்பட 5 பேரை தேடி வருகிறார்.

The post களக்காடு அருகே அனுமதியின்றி நுங்கு வெட்டியதை கண்டித்த காண்ட்ராக்டர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Nungu ,Kalakadu ,
× RELATED தேனியில் நுங்கு விற்பனை ஜோரு